tamilnadu

img

பெல் உள்பட 6 பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகளை விற்க மத்திய அரசு ஒப்புதல்

பெல் உட்பட 6 பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகளை விற்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

பொதுத்துறை நிறுவனங்களை தனியார்மயமாக்கும் நடவடிக்கை உள்ளிட்ட மோடி அரசின் பல நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து, நாடு தழுவிய அளவில் வேலை நிறுத்தப் போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், தில்லியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் இன்று (08.01.2020) நடைபெற்றது. இந்த கூட்டத்தில் இந்தியாவில் முன்னணி பொதுத்துறை நிறுவனமான பெல் உட்பட 6 நிறுவனங்களின் பங்குகளை விற்க கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. மத்திய அமைச்சரவையின் இந்த முடிவு அரசு ஊழியர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தவுள்ளது. 

இது குறித்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த மத்திய தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர், ”பொதுத்துறை நிறுவனங்களான எம்எம்டிசி (MMTC), தேசிய கனிவள மேம்பாட்டுக் கழகம் (NMDC), பாரத மிகுமின் நிறுவனம் (BHEL), ஒடிசா சுரங்கக் கழகம், ஒடிசா முதலீட்டுக் கழகம், எம்இசிஓஎன் (MECON) ஆகிய 6 நிறுவனங்களின் பங்குகளை விற்பனை செய்ய மத்திய அமைச்சரவை அனுமதியளித்துள்ளது. மேலும், நீலாஞ்சல் ஸ்பாட் நிறுவனத்தில் பங்குகள் வைத்திருக்கும் பங்குதாரர்களும் தங்கள் பங்குகளை விற்பனை செய்ய அமைச்சரவை அனுமதித்துள்ளது. இந்த பங்குகளை விற்பனை செய்து அதில் இருந்து திரட்டப்படும் நிதியை, சமூக மேம்பாடு வளர்ச்சித் திட்டங்களுக்குப் பயன்படுத்தப்படும்” என்று தெரிவித்துள்ளார்.

;